தஞ்சையில் மார்ச் 4 ஆம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்- பூமி பூஜை நடத்திய புஸ்ஸி ஆனந்த்
தஞ்சாவூர் அருகே த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்க உள்ள கூட்டத்துக்காக பூமி பூஜை போடப்பட்ட நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டி பகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்காக பூமி பூஜை இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகளைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்தித்து பேசவுள்ளார். இக்கூட்டத்தை வரும் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நடத்துவதற்கு த.வெ.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இக்கூட்டத்தில் ஏறத்தாழ 4 ஆயிரத்து 900 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்பர் எனக் கூறப்படுகிறது. இதற்கு அனுமதி கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் இராஜாராமிடம் த.வெ.க. மாவட்டச் செயலர் விஜய் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பிப்ரவரி 28 ஆம் தேதி மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, த.வெ.க. நிர்வாகிகளுடன் காவல்துறையினர் இரு முறை ஆலோசனை நடத்தினர்.
மேலும், இக்கூட்டம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் கூட்டத்துக்கு எத்தனை பேர் வருவர்? கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்? அடிப்படை வசதி விவரங்கள் உள்பட 32 கேள்விகளைக் காவல் துறையினர் கேட்டுள்ளனர். ஆனால், த.வெ.க. நிர்வாகிகளிடமிருந்து இன்று மாலை வரை பதில் வரவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர். இதனிடையே, கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் பூமி பூஜையை த.வெ.க. நிர்வாகிகள் இன்று நடத்தினர். பின்னர், அந்த இடத்தை த.வெ.க. பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் மாலையில் பார்வையிட்டார். அவர்கள் திட்டமிட்டபடி 4 ம் தேதி நடைபெறுமா என்பது நாளை தெரியவரும்.

