ஜனநாயகன் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது-நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம்
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில் கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படம் தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு குழு முன் ஆய்வில் உள்ளது. இந்த நிலையில், ஜனநாயகன் படம் ஏப்ரல் 3 ஆம் தேதி சட்டவிரோதாமாக இணையதளத்தில் வெளியானது. பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என ஃப்ரீலான்சிங் எடிட்டரான திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், திரைத் துறையில் தனக்கு யாரையும் தெரியாது, எந்த தொடர்பும் இல்லை. இதய நோயாளியான தான், சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன்; ஜனநாயகன் படத்தை யாருடனும் சேர்ந்து பார்க்கவில்லை; யாருக்கும் படத்தை பகிரவும் இல்லை, படம் வெளியானதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. உண்மை குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக அப்பாவியான தன்னை வழக்கில் சேர்த்துள்ளனர்; எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்ய இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் தெரிவித்தார். முக்கிய குற்றவாளியான இவர் படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியான பிறகு இதய நோய் என கூறி மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.வழக்கில் கைது செய்யப்பட்டவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், மனுதாரர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய தயாரிப்பாளர் தரப்புக்கு அனுமதி அளித்த நீதிபதி, வழக்கினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

