விஜய் வருகைக்காக காத்திருந்த தவெக வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கம்
திருப்பூருக்கு தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு செல்லும் நிலையில் தவெக வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கமடைந்தனர்.
கோவையில் இருந்து அவினாசி சாலை மார்க்கமாக விஜய் பெருமாநல்லூர் செல்ல உள்ள நிலையில், அவினாசி சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அவினாசி சாலையில் பல்வேறு விபத்துகள் நடைபெற்ற நிலையில், அந்த மேம்பாலம் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து மேம்பாலத்தின் கீழ் பகுதியில் விஜய் பயணிக்க உள்ள நிலையில், அனைத்து கனரக வாகனங்களையும் தற்போது முதலே போலீசார் மேம்பாலத்தின் மீது செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.மேலும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களையும் போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். விஜய் இந்த பாதையை கடந்து செல்லும் போது, ரசிகர்கள் மேம்பாலத்தின் மீது ஏறாமல் தடுக்க இரும்பு பேரி கார்டுகளை போலீசார் தயார் நிலையில் வைத்துள்ளனர். அதிகளவில் கூட்டம் ஏற்படும் பட்சத்தில் அவினாசியில் இருந்து கோவை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் மேம்பாலத்தின் மீது அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருப்பூருக்கு தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு செல்லும் நிலையில் தவெக வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கமடைந்தனர். கோவை சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார் கணியூர் சுங்கச்சாவடியில் விஜயை வரவேற்றபோது மயக்கமடைந்தார். திருப்பூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக பெருமாநல்லூர் முதல் பூலுவப்பட்டி பிரிவு வரை மதியம் 2 மணி முதல் வாகனத்தின் வாயிலாகத் தேர்தல் பிரசாரம் செய்யத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் திருப்பூரில் கொளுத்தும் கோடை வெயிலில் தவெக பரப்புரைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் விஜய்யைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தவர்களில் பலர் மயங்கி விழுந்தனர்.



