இங்கிலாந்து செல்கிறார் முதல்வர் விஜய்- உடன் செல்வது யார், யார்?
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளதுடன், அவற்றின்மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.
15.07.2026 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA), இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. CETA ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது. பல்வேறு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாடு வலுவான தொழில்துறைத் திறன்களைக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இத்துறைகளில் பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகள், பிரிட்டன் சந்தையில் அதிகரித்துவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பான நிலையில் உள்ளன. மேலும், கூட்டு நிறுவன பங்குதாரர்களைப் பெறுவதற்கும், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் (GCCs) நிறுவி செயல்பட்டு வருகின்றன. இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும். மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' (Motor Sports City) மாநிலத்தில் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான குழு இன்று (10.9.2026) சென்னையிலிருந்து புறப்பட்டு, 17.9.2026 அன்று சென்னை திரும்பும். இக்குழுவில் மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலர் திரு. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் (Guidance) மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெறுகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

