அஜித்குமார் குடும்பத்துக்கு விஜய் ரூ.2 லட்சம்! ஸ்டாலின் ரூ.5 லட்சம்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றையதினம் (01.07.2025) அலைபேசியின் வாயிலாக அவரது தாயார் மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அக்குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அமைச்சர் பெரியகருப்பன், இன்றையதினம் (2.7.2025) சிவகங்கை ஆட்சித்தலைவர் பொற்கொடி,இ.ஆ.ப., மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், பணி நியமன ஆணையினை மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமாருக்கு காரைக்குடியில் உள்ள சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் டெக்னீசியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார். மேலும், தேளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் அஜித்குமார் தாயார் மாலதிவுக்கு வழங்கினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் ஆணையின்படி, அமைச்சர் பெரியகருப்பன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 5 இலட்சம் ரூபாய் நிதியினை அஜித்குமார் தாயார் மாலதியிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.

இதேபோல் திருப்புவனம் மடப்புரத்தில் காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தவெக தலைவர் விஜய், அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.


