அமைச்சர் மரிய வில்சன் பேச்சால் கடும் அப்செட்டில் முதல்வர் விஜய்
அமைச்சர் மரிய வில்சன் பேச்சால் முதல்வர் விஜய் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் உரையில் தவறான தமிழ் உச்சரிப்பு குறித்த MLA ராஜேந்திரன் சுட்டிக் காட்டியதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், “எனக்கு ஒரு மொழியை எனது கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. இது பாதிப்பேருக்கு, எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாது. நான் பைபிளை படித்திருக்கிறேன். பிறப்பால் கிறிஸ்தவன்.இரக்கத்தின் மொழியை கிறிஸ்தவம் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. எவ்வளவுதான் தமிழ் படித்தாலும், பலருக்கும் இது தெரியாது. கிறிஸ்தவ மதத்தில் பிறந்த நான், இதையெல்லாம் பைபிளில் படித்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார். அமைச்சர் கிறிஸ்தவ மதத்தின் சிறப்புகளைப் பற்றிப் பேசட்டும். அதை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால், தாய்த் தமிழில் பிழையின்றிப் பேச வேண்டும் என்று கேட்டால், அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல், மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்வது திசைதிருப்பும் செயல் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதன்மையாக பாடப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நிறைவேற்றிய தீர்மானம் தான் மக்களிடம் பெரிய அளவில் பேசப்படும் என்று தவெக தலைமை கணக்கு போட்டு இருந்தது. ஆனால் நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழ் மொழியை குறைத்து பேசியும், மதம் சார்ந்து அவர் பேசிய பேச்சும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மரிய வில்சன் பேச்சால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் முதல்வர் விஜய் கொண்டு வந்த தமிழ் தாய் வாழ்த்து தீர்மானம் பெரிய அளவில் பிரதிபலிக்கவில்லை. மக்கள் மத்தியில் பேசு பொருளாகவும் ஆகவில்லை. இதனால் விஜய் கடும் அப்செட்டில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தனர்.

