இ பாஸ் எடுக்காமல் கொடைக்கானலுக்குள் நுழைந்த விஜய்
தமிழக வெற்றி கழகத் தலைவரும் நடிகருமான விஜயின் வாகனம் மற்றும் விஜய் உடன் வந்த வாகனங்கள் இ- பாஸ் பரிசோதனையை தவிர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளவிய சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானலுக்கு கடந்த வருடம் முதல் இபாஸ் கட்டாயம் பெற்று கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இ-பாஸ் பெற்று வந்தால் மட்டுமே கொடைக்கானலுக்குள் செல்ல அனுமதித்து வந்த நிலையில் இ-பாஸ் கட்டுப்பாடுகள் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானலுக்கு வரக்கூடிய வாகனங்கள் வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் வருவதற்கான அனுமதி உயர்நீதிமன்றம் வழங்கி இருந்தது.

கொடைக்கானலில் உள்ள மக்களும் இ-பாஸ் பெற்று தான் கொடைக்கானலுக்கு வர முடியும். இதற்கான சோதனை சாவடிகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று கொடைக்கானல் தாலுகாவில் உள்ள தாண்டிக்குடி பகுதிக்கு வருகை புரிந்தார். அப்போது சித்தரேவு மலை சாலை வழியாக கொடைக்கானலுக்கு வருகை புரிந்தார். அப்போது விஜய் வந்த வாகனம் மற்றும் விஜய் உடன் வந்த பாதுகாப்பு வாகனங்கள் அனைத்துமே இபாஸ் பரிசோதனை செய்யாமல் கடந்து வந்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது. மேலும் இதுகுறித்து கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் கேட்டபோது கொடைக்கானல் தாலுகாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு இ பாஸ் அவசியம் என்று தெரிவித்திருந்தார். மேலும் கொடைக்கானல் நகரத்திற்கு மட்டும்தான் இபாஸ் தேவை அதனை தவிர்த்து கீழ் மலை பகுதிகளுக்கு இ-பாஸ் தேவை இல்லை என்ற ஒரு கருத்தும் பரவி வருகிறது. இ பாஸ் பரிசோதனை செய்யாமல் வந்த விஜயால் இ பாஸ் நடைமுறையில் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.


