“விஜய் கூறியபடியே மக்கள் பணத்தை நாங்கள் எடுக்க மாட்டோம், ஊழல் செய்ய மாட்டோம்”- தவெகவின் இளம் வேட்பாளர்
விஜய் கூறியபடியே மக்கள் பணத்தை நாங்கள் எடுக்க மாட்டோம், ஊழல் செய்ய மாட்டோம் என்று கிணத்துக்கடவு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கிணத்துக்கடவு தொகுதி தவெக வேட்பாளர் விக்னேஷ், “கிணத்துக்கடவு தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டியான கோவை மாநகராட்சியில் முறையாக பொது கழிப்பிடம் கூட இல்லை. என்னுடைய தொகுதிகளில் அடிப்படை தேவைகள் இல்லை. மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என அரசு நினைத்து விட்டது. பொதுக்கழிப்பிடம் பல்வேறு பகுதிகளுக்கு தேவை. ஆக்சிஜன் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் கொண்டு வரவேண்டும். தேர்தலுக்கு முன்பு அதிமுக கோட்டை என சொன்னார்கள். சண்டை நடந்தாத்தான் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியும்.ஜனநாயக சண்டையில் ஆறு தொகுதிகளில் கோவையில் முன்னிலை பெற்றுள்ளோம்.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன அதன் தீர்வுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அதனை சரிசெய்ய செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 40 இடங்களில் மைக்ரோ கம்போசிங் சென்டர் கொண்டுவர வேண்டும். 100 வார்டுகளில் குப்பைகளை அங்கு கொட்டுகிறார்கள். மலைபோல சேர்ந்திருக்கிற குப்பைகளை பயோ மைனிங் மூலமாக தரம் பிரித்து உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளலூர் பேருந்து நிலையம் தற்காலிகமாக தடுத்து நிறுத்தி உள்ளார்கள். அந்தப் பேருந்து நிலையம் கண்டிப்பாக வரும். தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைக்க மாட்டோம் மாற்றத்திற்கான அரசைக் கொண்டு வருவோம். ஊழல் இல்லாத அரசைக் கொண்டு வருவோம். மக்கள் பணத்தை எடுக்கமாட்டேன் என்று விஜய் கூறினார். அதனை மூன்று நாட்களுக்கு முன்பு எங்களிடமும் தெரிவித்தார். அதனை நாங்கள் கடைபிடிப்போம். ஊழல் செய்ய மாட்டோம். கமிஷன் மூலமாக போடப்படும் சாலைகள் மோசமாக உள்ளன. நான் டாஸ்மாக் கலாச்சாரத்துக்கு எதிரானவன். பொதுப் பகுதியில் இருந்த கடைகளை எடுத்து வேறு இடங்களுக்கு வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

