“கூடுதல் தொகுதிகளைவிட எங்களுக்கு இதுதான் முக்கியம்! இல்லையெனில் அதிமுகவுடன் கூட்டணி”- வேல்முருகன்
திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது வேறு கூட்டணியா? அல்லது தனியாக போட்டியா? என்பது குறித்து 2 நாட்களில் தெரியும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி உயர் நிலை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர் வேல்முருகன், “தொகுதிப் பங்கீட்டில் கூடுதல் இடங்கள் கேட்டிருந்தோம். தற்போது வரை திமுக எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. திமுக கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் குழு பரிந்துரை செய்துள்ளார்கள். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியா?, மற்ற கூட்டணியில் இணைவதா? அல்லது திமுக கூட்டணியில் கோரிக்கை ஏற்கப்பட்டால் தொடர்வதா? என்ற முடிவை தலைவர் என்ற முறையில் நான் எடுக்க, நிர்வாகிகள் கூறியுள்ளனர். திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது வேறு கூட்டணியா? அல்லது தனியாக போட்டியா? என்பது குறித்து 2 நாட்களில் தெரியும்.
சாதிவாரி கணகெடுப்பு உள்ளிட்ட 10 கோரிக்கைகள் வைத்துள்ளோம். கூடுதல் தொகுதிகளைக் காட்டிலும், மக்கள் பிரச்னைகள் தொடர்பாக எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழ் சமூகத்திற்காக நாங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் கூட்டணி தொடரும். திமுக எந்தப் பதிலையும் கூறவில்லை என்றால், எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படும். எங்களது கோரிக்கைகளை ஏற்க அதிமுக போன்ற கட்சிகள் முன் வந்தால் கூட்டணியில் சேருவது குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.

