“90% பேர் விஜயை ஒரு மனதாக முதல்வராக வரவேண்டும் என விரும்புகின்றனர்”- செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளருமான கே ஏ செங்கோட்டையன் காலை 7:00 மணிக்கு முதல் நபராக வந்து வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க, எதிர்கால தமிழக நலன்களுக்காக மக்களின் கனவுகளை நிறைவேற்ற, எல்லோரும் விரும்பும் மாற்றத்தை விஜய் உருவாக்குவார். அவரை தமிழ்நாடே ஏற்றுக் கொண்டுள்ளது.. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் பணியாற்றி வருகிறார். அவரது தொலைநோக்கு பார்வை தமிழகம் இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும். மேலை நாடுகளைப் போல தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என அயராது உழைத்து வருகிறார். பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் திரைப்படத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தையும் தவிர்த்து தடைகளை தகர்த்து மக்களை சந்தித்து மக்களுக்காக பணியாற்றுவதற்காக புறப்பட்டு வந்துள்ளார். அவர் தமிழகத்தை ஆள்வது மக்களின் கனவாக இருக்கிறது. 18 முதல் 40 வயது உடைய 90 சதவீதம் பேர் ஒரு மனதாக அவர் முதல்வராக வரவேண்டும் என விரும்புகின்றனர்.
கோபிசெட்டிபாளையத்தை மாவட்டமாக உருவாக்க வேண்டும், புறவழி சாலை அமைக்க வேண்டும், பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை, வாக்குறுதிகளாக அளித்துள்ளேன். தமிழகத்தில் மும்முனை போட்டி என்றாலும் மக்கள் ஒரு முகமாக இருக்கிறார்கள் 27 கட்சி கூட்டணியாக வந்து ஒருவரை எதிர்க்கின்றனர். பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தேர்தலை சந்திக்கின்றனர் இது வேடிக்கையாக இருக்கிறது விஜய் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இரண்டு முறை எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்திருக்கின்றார். அவர் வந்து சென்று என்னை பற்றி பேசியது கூடுதலாக வாக்குகளை நான் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே மிகப்பெரும் மாநாட்டை ஈரோட்டில் நான் நடத்தி இருக்கின்றேன், அதுவே மிகப் பெரும் பிரச்சாரமாக இருந்தது” என்றார்.

