“தவெகவை கண்டு டெல்லி பயப்படுகிறது; விஜயை கோட்டைக்கு அனுப்பும் வரை ஓயப்போவதில்லை”- செங்கோட்டையன்

 
“யார் சொல்லியும் நான் தவெகவில் இணையவில்லை”- செங்கோட்டையன் “யார் சொல்லியும் நான் தவெகவில் இணையவில்லை”- செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தவெக கோபிசெட்டிபாளையம் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று உரையாற்றினார். 

sengottaiyan

அப்போது பேசிய செங்கோட்டையன், “நான் இங்கே வரவில்லை என்றால் என்னை குப்பைத்தொட்டியில் தூக்கி வீசி இருப்பார்கள், அது நடந்து முடிந்த ஒன்று. 50 ஆண்டுகால அரசியலில் அனுபவம் வாய்ந்த என்னை ஒரே நிமிடத்தில் தூக்கி வீசினார்கள், ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர்கள் நன்றியை மறந்தவர்கள். மனம் நொந்து போய் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே என்னை தூக்கி வீசியதற்கு பிறகு ஒரே நொடியில் என்னை தூக்கி விட்டவர் விஜய். விஜயை கோட்டைக்கு அனுப்பும் வரை ஓயப் போவதில்லை. கோபி தொகுதியில் வெற்றி கூட்டத்தை நடத்தப் போவதாக எடப்பாடி தெரிவித்திருக்கிறார். ஆனால் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்களாக 234 தொகுதிகளிலும் வருவார்கள். விஜயுடன் எந்த நேரத்திலும் தொலைபேசியில் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு இருக்கிறது. சென்னைக்கு சென்றாலும் அவரை சந்திக்கின்றேன்.

வெளிநாடுகளில் இருந்து மூன்று லட்சம் பேர் தலா ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து வாக்களிப்பதற்காக தமிழகத்திற்கு வர இருக்கிறார்கள். ஏழை மக்களின் கண்ணீரைத் துடைத்து, ஏழை மக்களின் சிரிப்பில் இறைவனை காண்பவர் விஜய். பேசாமல் இருப்பவரை பேச வேண்டும் என கேட்கின்றார்கள். அவர் பேசினால் முடிந்துவிடும் எதிர்க்கட்சியினரின் கதை,  அவர் எப்போது பேசுவார் எதை பேசுவார் என்பது அவருக்கு தெரியும், அவர் பேசினால் இந்தியாவே திரும்பி பார்க்கும். அவரின் சிந்தனையும் தொலைநோக்கு பார்வையும் அவரிடம் பார்க்கும்போது திரைப்படத்தில் மட்டுமல்ல உலக அளவில் சிறந்த தலைவராக வருவார், தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர் அமர்ந்து விட்டால் அவர் இருக்கும் வரை அவர் தான் நிரந்தர முதலமைச்சராக இருப்பார். திரைப்படத்தில் 500 கோடி ரூபாய் வருவாயை வேண்டாம் என கூறிவிட்டு வந்துள்ளார். ஜனநாயகன் வெளியிடப்படாவிட்டாலும் பரவாயில்லை என்று ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக வந்துள்ளார். 2026 மட்டுமல்ல என்றைக்கும் நிரந்தர முதலமைச்சராக விஜய் வருவார். 

கரூருக்கு பிறகு ஜனநாயகம் முடக்கப்பட்ட பிறகு விஜய் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பிறகு நமது நிலை 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.  மற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து 48 சதவீதத்தை எட்டிப் பிடிக்க முடிய வில்லை. இதனால் தான் டெல்லி நம்மை கண்டு பயப்படுகிறது, காரணம் 42 சதவீதம் வாக்குகள் நம்மிடம் இருப்பது தான். விஜய் அறிக்கை விட்டால் ஒரு மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள். விருப்ப மனு வாங்குவதற்கு ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் வந்தார்கள். இரண்டு மணி நேரத்தில் 10 ஆயிரம் பேர் விண்ணப்பத்தை வாங்கிச் சென்றனர், கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் விண்ணப்ப விநியோகம் மாற்றப்பட்டுள்ளது. 1 கோடியே 28 லட்சம் பேரை தாண்டி உறுப்பினர் சேர்க்கை சென்றுள்ளது. இது 2 கோடியை எட்டும்” என்றார்.