“தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்! விரைவில் இணைப்பு”- செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் விரைவில் இணைவார்கள், இது பொங்கலுக்குள் நடைபெறும் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகத்தை கே எ செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொங்கலுக்குள் இன்னும் பல முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தவெக.வில் இணைய உள்ளனர். அதற்கான காட்சியை பார்க்க இருக்கிறீர்கள். தலைவரிடம் அனுமதி பெற்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். Ops, TTV தினகரன் தவெக கூட்டணியில் இணையவுள்ளதை விரைவில் எதிர்பார்க்கலாம்.. பொங்கலுக்கு முன்பே இது நடைபெறும். ஒரே நாளில் திட்டமிட்ட நிகழ்ச்சி, இதற்கு இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்கள். மலேசியா சென்று தலைவர் திரும்பி இருக்கிறார். ஒன்பதாம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக இருக்கிறது.. இந்த படம் வெளிவந்த பிறகு நிறைய கட்சிகள் முடங்கிப் போகும்.
என்னை அதிமுகவிலிருந்து தூக்கி எறிந்தாலும், என்னை தூக்கிப் பிடித்துக் கொள்ள கோடான கோடி தொண்டர்கள் இங்கே உள்ளனர். அதிமுகவில் 50 ஆண்டுகாலம் உறுப்பினராக சேர்ந்த நாள் முதல் பாடுபட்டு வந்தேன், என்னை சாதாரணமாக தூக்கி எறிந்து விட்டார்கள். காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த தொகுதி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் சட்டமன்ற உறுப்பினராக வருவார். நம்மை ஏமாற்றுவதற்கு அனைவரும் தயாராக இருக்கிறார்கள். ஏமாறப்போவது ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தான் எல்லோரும் பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும் பயந்து கொண்டு உள்ளது. புயல் வேகத்தில் வருகின்ற கூட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்ற விஜயின் பிரச்சாரக் கூட்டத்தை ஆர்ப்பரித்து கூட்டம் வந்தது. தமிழ்நாட்டில் வரலாற்றில் புரட்சித்தலைவருக்கு பிறகு வேறு யாருக்கும் வந்ததில்லை. எம்ஜிஆர்க்கு பிறகு இந்த கூட்டம் தற்பொழுது வந்துள்ளது. வரலாறு படைக்க ஒரு தலைவர் தேவை, நல்லாட்சி தமிழகத்தில் உருவாவதற்கு ஏழைகளின் கண்ணீரை துடைப்பதற்கு இங்கே இருக்கிற தொழிற்சாலைகள் முடங்காமல் பாதுகாப்பதற்கு சுற்று சூழலை பாதுகாப்பதற்கு சிப்காட் கழிவுநீரை தடுப்பதற்கு இதுபோன்ற இயக்கம்தான் தமிழகத்தில் வேரூன்ற போகிறது. இதை யாராலும் தடுக்க முடியாது, ஒரு படத்திற்கு 250 கோடி ரூபாய் 4 படம் எடுத்தால் ஆயிரம் கோடி.... ஆயிரம் கோடி ரூபாயை தூக்கி எறிந்து விட்டு மக்கள் பணி செய்வதற்காக வந்திருக்கின்றார். அவரின் தூய்மையான, நேர்மையான பயணத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.விஜயுடன் ஐந்து முறை நேரடியாகவும் 45 முறை தொலைபேசிகளும் பேசி இருக்கின்றேன், தமிழ்நாட்டின் வெற்றி பயணமாக அவரது பயணம் அமைய இருக்கிறது. இந்தியாவே திரும்பி பார்க்கக் கூடிய தலைவராக விஜய் உருவெடுப்பார். ஆற்று வெள்ளத்தை அணை போட்டு தடுக்க முடியாது, சுழல் காற்றை சுவர் எழுப்பி தடுக்க முடியாது, அதுபோல விஜய் கோட்டையில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.


