"விஜய் தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் வரையில் ஓயமாட்டோம்”- செங்கோட்டையன்
தேவையற்ற விமர்சனங்களுக்கு நாங்கள் பேச விரும்ப வில்லை எங்கள் லட்சியம் வேறு. வெற்றி இலக்கை நோக்கி செல்கிறோம். டெபாசிட் இழக்க விரும்பவில்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் . அப்போது பேசிய அவர், “நான் திருப்பூர் பலமுறை வந்துள்ளேன். இங்குள்ள கூட்டத்தை பார்க்கும் போது திருப்பூர் திருப்புமுனையை ஏற்படுத்தும். பல கட்சிகள் கூட்டம் கூட்டினால் இவ்வளவு கூட்டம் வராது. கூட்டம் வந்தாலும் இது. போன்ற உத்வேகம் வேகம் இருக்காது. வெற்றி நாயகன் தளபதியை யாராலும் வெல்ல முடியாது. தமிழகத்தை ஆளப்போகும் தலைவனை, வெற்றிக் கழகத்தை வெல்ல எவராலும் வீழ்த்த முடியாது. ஆளை தேடி தேடி வேட்பாளராக நிறுத்தியதை பார்த்துள்ளேன். ஆனால் 234 தொகுதியில் தவெக வெற்றி பெறும். மே மாதத்திற்கு பிறகு தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டியாக இருக்கும். விஜய் தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் வரை நாம் ஓயப்போவதில்லை. பொங்கலுக்கு பிறகு மாற்றம் தமிழகத்தில் உண்டாகும். எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். நாளை தேர்தல் நடைபெற்றாலும் அவர் தான் முதல்வர்” என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை பார்க்கும் போது திருப்பூர் திருப்புமுனையாக அமையும். ஆளும் கட்சி எதிர்கட்சிகள் இரண்டு புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு பிறகு புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனர். வெற்றித் தளபதி மலேஷியா சென்றுள்ளார். அவரை காண பலர் வந்துள்ளார்கள் கேரள, ஆந்திரா, கர்நாடக போன்ற மாநிலங்களில் கூட இவரை போன்றவர் நமக்கு இல்லையே என நினைக்கும் நிலை உள்ளது. படத்திற்கு 250 கோடி என பல கோடி வருமானத்தை விட்டு வந்தவர். திருப்பூரில் குப்பை பிரச்சனை கடுமையாக உள்ளது. தொழிற்சாலை முடங்கி உள்ளது. தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். நாடு முன்னேற தன்னம்பிக்கை உடன் தொழில் செய்ய அரசு சரியான முறையில் செயல்பட வில்லை. மக்கள் சக்தி இளைஞர்கள் ஒன்று கூடி உள்ளனர். 2026ல் 234 தொகுதியிலும் வெல்வார். மக்கள் சக்தியை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது. அரசு ஊழியர்கள் செவிலியர்கள் பிரச்சனையை தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்வோம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. ஆட்சி முடியப் போகிறது. நல்ல ஆட்சியை தலைவர் தமிழகத்தில் நடத்துவார். இது தமிழ் நாடு. தமிழ்நாட்டில் மத்திய அரசு வர வாய்ப்பு இல்லை. தேவையற்ற விமர்சனம் செய்கிறார்கள் அவர்களைப் பற்றி நாங்கள் பேசினால் நீங்களும் கேட்பீர்கள் எங்கள் லட்சியம் வேறு. வெற்றி இலக்கை நோக்கி செல்கிறோமே தவிர டெபாசிட்டை இழக்க அல்ல. தேர்தல் பயம் காரணமாக பொங்கல் பரிசு அறிவிப்புகள் குறித்து தகவல் வருகிறது. தலைவர் விஜய் நல்லதுக்கு தான் வாய் திறப்பார். கவலைப்பட தேவையில்லை . இனி தலைவரின் பயணம் வரலாறு படைப்பதாக இருக்கும். நாங்கள் வெற்றி தளபதி . தளபதி என்றால் படைக்கு தளபதியாவது வெற்றி தளபதி என்றால் வெற்றி பெற்று நாட்டை ஆள்வது” என தெரிவித்தார்.


