”கரூர் துயரத்திற்கு செந்தில்பாலாஜிதான் காரணம் என்று அமித்ஷா முன்பே நயினார் நாகேந்திரன் சொல்கிறார்”- நிர்மல் குமார்
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு, வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுகிறதோ எனத் தோன்றுகிறது என தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், “ஜனநாயகன் திரைப்படம் டிசம்பர் 19ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பல வாரங்கள் முன்பே ஜனநாயகன் படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள், அதற்கு U/A சான்றிதழை பரிந்துரைத்த நிலையில், தற்போது வரை தணிக்கை சான்று தரப்படவில்லை. கடந்த வாரமே தணிக்கைச் சான்றிதழ் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை. ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு, வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுகிறதோ எனத் தோன்றுகிறது.
தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் ஏமாற்றுவேலை. எப்போது அமல்படுத்தப்போகிறார்கள் என்று தெரியவில்லை, எந்த தேதி என்று இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றுதானே தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள்? இதுதான் பழைய ஓய்வூதியமா? கரூர் துயர சம்பவத்திற்கு செந்தில்பாலாஜிதான் காரணம் என்று உள்துறை அமைச்சரை வைத்துக் கொண்டே நயினார் நாகேந்திரன் சொல்கிறார். புலனாய்வு அமைப்புகள் அவர்களிடம் தானே இருக்கிறது. தவெகவில் புதிதாக வரும் சக்தியை கணிக்க முடியாது, 70 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் நடக்கும்” என்றார்.


