தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்தேனா?- நாஞ்சில் சம்பத் பரபரப்பு விளக்கம்

 
தி.மு.க-வில் நான் சைக்கிள் கூட கேட்டதில்லை, கேட்டாலும் கிடைக்காது - நாஞ்சில் சம்பத்

விஜய் அவர்களின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள் என தவெக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.

Image

தொடக்கத்தில் திமுகவில் (DMK) தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய நாஞ்சில் சம்பத், பின்னர் வைகோவுடன் இணைந்து மதிமுகவின் (MDMK) கொள்கை பரப்புச் செயலாளராக நீண்ட காலம் தீவிரமாகப் பணியாற்றினார். 2012-இல் அதிமுகவில் (AIADMK) இணைந்த இவருக்கு, ஜெயலலிதாவால் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அமமுக மற்றும் திமுக ஆதரவு: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டி.டி.வி. தினகரனின் அமமுகவில் சில காலம் பயணித்தார். அதன்பின் சில ஆண்டுகள் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், திமுக கூட்டணிக்காகத் தேர்தல் மேடைகளில் பரப்புரை மேற்கொண்டார். 2025 டிசம்பரில் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் (TVK) அதிகாரப்பூர்வமாக இணைந்தார். தற்போது அக்கட்சியின் பரப்புரைச் செயலாளராக (Campaign Secretary) நியமிக்கப்பட்டு, தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் கட்சியிலிருந்து விலக போவதாகவும் தகவல்கள் கசிந்தன.


இந்த விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ்தளத்தில், "உப்பைப் போல எளிமையானத் தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி விஜய். இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் தளபதி விஜய் அவர்களின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள்.  அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.