சவுக்கு சங்கர் தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது கண்டிக்கதக்கது: புஸ்ஸி ஆனந்த்

 
ஆனந்த்

ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லையென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, விமர்சனம் செய்தவரின் வயதுமுதிர்ந்த தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது என வெகவின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.

2026-ம் ஆண்டில் விஜயை முதலமைச்சர் ஆக்க கடுமையாக உழைக்கவேண்டும்- புஸ்ஸி  ஆனந்த்- Bussy Anand Says They should work hard to make Vijay the Chief  Minister in 2026

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர். யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமின் பெற்று வெளியே வந்த இவர், தொடர்ந்து யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டுவருகிறார். தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி இவர் வீட்டின் மீது இன்று (மார்ச் 24) காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார். 


இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில், “யூட்யூபர் திரு.சவுக்கு சங்கர் அவர்கள் வீட்டில், அவருடைய தாயார் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிலர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீடு முழுக்கச் சாக்கடையையும் மலத்தையும் கொட்டிவிட்டு, மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லையென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, விமர்சனம் செய்தவரின் வயதுமுதிர்ந்த தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது.  இந்த இழிவான செயலைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.