“காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்”- எம்.எல்.ஏ. சிந்து கோரிக்கை
காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு வருபவர்களை சொந்த சமூகப் பாசத்துடனோ அல்லது பிற சமூக வெறுப்புடனோ அணுகக் கூடாது என தவெக எம்.எல்.ஏ சிந்து கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய எம்.எல்.ஏ.சிந்து, “காவல்நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களோ வரும்போது காவலர்கள் சிலர் சமூக பாசத்துடன் செயல்படுவதாக விமர்சனங்கள் வருகிறது. பத்திரிகைகளில் கட்டுரைகளாகவும் வந்திருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களோ காவல் நிலையத்திற்கு வரும்போது, காவல்துறையினர் அவர்களைச் சொந்த சமூகப் பாசத்துடனோ அல்லது பிற சமூக வெறுப்புடனோ அணுகக் கூடாது. அவ்வாறு பாகுபாடு காட்டுவது சரியான முறையல்ல, இந்த நிலை தொடர்ந்தால் காவல்துறையின் மீது வெறுப்புணர்ச்சி தோன்றும், அது குற்றங்கள் மேலும் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். பொதுமக்கள் மத்தியில் காவல்துறை மீது வெறுப்புணர்வை ஏற்படுத்திச் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்கும். எனவே, எவ்வித சமூக பேதமுமின்றி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சமூக பேதம் இல்லாமல், குற்றத்தின் அடிப்படையில் அணுக வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும். எல்லா அதிகாரிகளையும் சொல்லவில்லை” என்றார்.

