"அ.தி.மு.க கோட்டையே காலியானது! இபிஎஸ் லெட்டர் பேட் கட்சியாக மாற்றிவிட்டார்" - அமைச்சர் நிர்மல்குமார்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி தவெக அரசின் 4 மாத நல்லாட்சிக்கான வெற்றி என அமைச்சர் நிர்மல்குமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “தேர்தல் எப்போது வந்தாலும், மக்கள் கண்டிப்பாக நம் முதல்வர் விஜய்க்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதை அதிமுக, திமுகவால் தர முடியாது. இந்த வெற்றி அண்ணன் விஜயின் 4 மாத நல்லாட்சிக்கான வெற்றி. மக்கள் அனைவரும் மாற்றத்தை விரும்பி 2026 தேர்தலில் வாக்களித்தார்கள். அடுத்து வரும் காலங்களிலும் இந்த நல்லாட்சி தொடரும். தவெக தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசாக இருக்கும். அ.தி.மு.கவை தன்னோட கம்பெனி மாறி இ.பி.எஸ் யூஸ் பண்ணிட்டு இருக்காரு.. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செஞ்சிட்டு வர காரணமே இதான். அதிமுகவை இபிஎஸ் எங்க கொண்டு வந்து நிறுத்திருக்காரு பாத்தீங்களா? எந்த காலத்திலும் தோற்காத அ.தி.மு.க கோட்டையே காலியானது. அதிமுக- திமுக இருவரும் கூட்டாளிகள்தான். பிரச்சாரத்தின்போது இருவரும் ஒருவரையொருவர் விமர்சிக்கவில்லை. தனது சொத்துக்களை காப்பாற்ற அதிமுகவை இபிஎஸ் லெட்டர் பேட் கட்சியாக மாற்றிவிட்டார்” என விமர்சித்தார்.

