“அரசியலில் விமர்சனம் என்பது ஆரோக்கியமானது; ஆனால் தரம் குறைந்துவிடக்கூடாது”- ஜெகதீஸ்வரி

 
“இதற்கு முதல்வரும் சப்போர்ட் செய்ய மாட்டார்! யாராக இருந்தாலும் தண்டனைதான்”- அமைச்சர் ஜெகதீஸ்வரி

அரசியலில் விமர்சனம் என்பது ஆரோக்கியமானது. ஆனால் விமர்சனம் தரம் குறைந்துவிடக்கூடாது. வார்த்தைகளில் கண்ணியமும் பொறுப்பும் இருக்க வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெகதீஸ்வரி தனது எக்ஸ் தளத்தில், “பதவியில் இருப்பவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அரசியல் நாகரிகம் அல்ல. மக்கள் பணியைப் பற்றி பேசாமல் தனிநபர் விமர்சனத்தில் கவனம் செலுத்துவது ஏன்? நயினார் நாகேந்திரன் முதலில் தமிழக மக்களுக்கு பாஜக என்ன செய்யப் போகிறது என்பதை விளக்கட்டும். அதன்பிறகு மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யலாம். வார்த்தைகளால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நினைப்பது தவறு. மக்கள் யார் உழைக்கிறார்கள், யார் பேசுகிறார்கள் என்பதை தெளிவாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தனிப்பட்ட விமர்சனங்களால் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது. மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதுதான் ஒரு பொறுப்பான அரசியல்வாதியின் கடமை. தமிழக மக்களின் நலன், பெண்களின் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசாமல், தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது எந்த வகையில் பயனளிக்கும்? அரசியலில் விமர்சனம் என்பது ஆரோக்கியமானது. ஆனால் விமர்சனம் தரம் குறைந்துவிடக்கூடாது. வார்த்தைகளில் கண்ணியமும் பொறுப்பும் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.