“அதிமுக தான் தவெக; இரட்டை இலை தான் விசில்”- ஆதவ் அர்ஜூனா
கரூர் பிரச்சாரத்தின் போது உரிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்காமல் திமுக ஆட்சியில் சூழ்ச்சி செய்யப்பட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுராந்தகம் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கடந்த ஆட்சியில் விஜய் கரூர் சென்ற போது உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. முதலமைச்சரான பின் கரூர் சென்றபோது எந்த அசம்பாவிதமும் நடைபெற்றவில்லையே. இப்பத் தெரிகிறதா சூழ்ச்சி என்னன்னு...இதுகுறித்து திமுகவை நோக்கி மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். திமுகவை கேள்வி கேட்ட எங்க அண்ணனை தமிழக மக்கள் முதல்வராக்கிருக்கிறார்கள் இப்போ தெரிகிறதா எது உண்மையான அதிமுக என்று. அதிமுக செயலிழந்து, தவெகவை அதிமுகவாக பார்க்கிறார்கள். அதனால்தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இரட்டை இலை தான் விசில், எனவே இரட்டை இலைக்கு பதில் விசிலுக்கு வாக்களியுங்கள், இரண்டும் ஒன்றாகிவிட்டது.
எங்க அண்ணன் இன்னும் முதலமைச்சர் ஆயிட்டோம்ன்ற உணர்வே இல்லாம மக்களோடு மக்களா நிக்கும்போது, அமைச்சர்கள் நாங்க அப்படிதானே இருக்க முடியும்?; அதிகார தோரணை எங்களுக்குக் கிடையாது, முதலமைச்சருக்கும் கிடையாது. மக்கள் சாதியையும் பார்க்கல, மதத்தையும் பார்க்கல, பணத்தையும் பார்க்கல, இதுதான் 2026-ன் முதல் வெற்றி. அம்மாவுக்குப் பிறகு திமுகவை எதிர்த்து நிக்கக்கூடிய வலிமை நம்ம விஜய் அண்ணனுக்கு மட்டும்தான் இருக்கிறது. திமுகவுக்கு எதிராக புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சிங்கம் மாதிரி இருந்தார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் திமுக கொள்ளையடித்த போது அதிமுகவினர் குரல் கொடுத்தார்களா? 1972ல் எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கலைஞர் பயந்தார். பிறகு, அம்மாவைப் பார்த்துத் திமுகவினர் பயந்தார்கள்.அதற்குப் பிறகு, திமுக பயந்து நடுங்கிய ஒரே ஆள் நம்முடைய தலைவர் விஜய் அண்ணன்தான்” என்றார்.

