வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை!
அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
— TVK Vijay (@tvkvijayoffl) February 4, 2024
இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள் என குறிப்பிட்டுள்ளார்.