“அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறிப்பிட்ட நபருக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கு துளி அளவும் தொடர்பு இல்லை”- தவெக

 
ஆதவ் அர்ஜூனா

தற்போது அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறிப்பிட்ட நபருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு துளி அளவும் தொடர்பு இல்லை. தைரியம் இருந்தால் அதை சட்டரீதியாக தி.மு.க ஐ.டி விங் இதை நிரூபிக்கட்டும் என தவெக ஐடி விங் கூறியுள்ளது.

ஆதவ் அர்ஜூனா

அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது என திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக ஐடி விங், “தி.மு.க வின் அரசியலே ஒட்டுமொத்தமாக பொய்யும், புரட்டையுமே தங்களது  அரசியல் வழியாக காலந்தோறும் செய்துவருகிறது. அதன் நீட்சியை இப்போது தி.மு.கவின் ஐ.டி-விங்கும் துவக்கியுள்ளது. தரம்தாழ்ந்த அரசியல் விமர்சனங்களையும், உண்மைக்குமாறான தகவல்களையும் பொதுவெளியில் பரப்பிவருவது திமுகவின் ஐடி விங்கிற்கு வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை, அவதூறு செய்திகளை தற்போது பரப்பி, தங்கள் அரசியல் நாகரீகம் அற்றவர்கள்  என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்துவருகிறார்கள். 


அரசியலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாமல் தேர்தல் தோல்வியால், பித்துப் பிடித்த  மனநிலையில்  உள்ள திமுக தலைமை, மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை குறிவைத்து உண்மைக்கு மாறான வதந்திகளை தொடர்ந்து  பரப்பிவருகிறார்கள். திமுகவின். இதுபோன்ற  அவதூறுகள் மற்றும்  பொய்யுரைகளை கண்டுதான் மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடத்தை தேர்தல் நேரத்தில் கொடுத்தார்கள். தற்போது அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறிப்பிட்ட நபருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு துளி அளவும் தொடர்பு இல்லை. தைரியம் இருந்தால் அதை சட்டரீதியாக தி.மு.க ஐ.டி விங் இதை நிரூபிக்கட்டும். ஐந்து வருடங்களாக தி.மு.க ஆட்சியிலிருந்த போது போதை கலாச்சாரத்தை ஊக்குவித்து, தமிழகத்தை நாசகரம் செய்தததை மக்கள் மறக்கவில்லை. இன்று அதை ஒழிக்கவும், அடுத்த தலைமுறையை  நல்வழிப்படுத்தி போதை கலாச்சாரத்தை முற்றிலும் தமிழகத்திலிருந்து அகற்றுவதற்கான பெரும் போராட்டத்தை  எல்லா வகையிலும் இந்த அரசு செய்து வருகிறது. தி.மு.க வின் பொய்களுக்கும், வதந்திகளுக்கும் நாகரீகமற்ற குற்றசாட்டுகளுக்கும் விரைவில் சட்டரீதியாக நாங்கள் பதிலடி கொடுப்போம். அமைச்சர் மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை முன்வைத்து தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட தி.மு.க ஐ.டி விங்கை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்…அபாண்ட பொய்களையும், அவதூறு செய்திகளைப் பரப்பியே பழக்கப்பட்ட தி.மு.க ஐ.டி விங்கின் முகமூடியை மக்கள் முன் உண்மைப்படுத்துவோம்…” எனக் குறிப்பிட்டுள்ளது.