சட்டவிரோதமாக மது விற்ற த.வெ.க. பிரமுகர் கைது!

 
ச்

பெரம்லூரில் சட்டவிரோதமாக மது விற்ற த.வெ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Image


தமிழ்நாடு முதல்வர் விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து , பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை முன்னிறுத்தி, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் (500 மீட்டர் சுற்றளவிற்குள்) செயல்படும்  717 டாஸ்மாக் கடைகளை மூட  முதல்வர் விஜய் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் அதிகாரிகள் ஒவ்வொரு கடைகளிலும் நேரில் ஆய்வு செய்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் உட்பட பல இடங்களில் உள்ள கடைகளை ஆராய்ந்து அவற்றை மூடுவதற்கு உண்டான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அதன்படி முதற்கட்டமாக 480 கடைகள் ஆய்வு செய்து நிரந்தரமாக மூடப்பட்டன. மீதமுள்ள இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து அந்தக் கடைகளையும் மூடுவதற்கான நடவடிக்கை எடுத்தனர். இரண்டு வாரங்களுக்குள் மூட முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தினர். அதில் மீதமுள்ள கடைகளை மூடுவதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில்  பெரம்பலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில், மதுபானங்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாக விற்று பணம் சம்பாதித்த த.வெ.க. பிரமுகர்  உமேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர், உமேஷிடம் இருந்த சுமார் 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவரை, பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.  உமேஷ் த.வெ.க. வில் ஆலத்தூர் ஒன்றிய  செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தப்பி ஓடிய அவரு கூட்டாளியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.