தூய்மை பணியாளர்களை வெறும் கையால் காலணிகளை எடுக்க வைத்த தவெகவினர்
சென்னை விம்கோ நகரில் நடைபெற்ற திருவொற்றியூர் எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழாவில் தூய்மை பணியாளர்களை வெறும் கையால் காலணிகளை எடுக்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது.

சென்னை விம்கோ நகரில் தவெக அமைச்ச புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்ட, திருவொற்றியூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) அலுவலகத் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்த தவெகவினர் ஆங்காங்கே காலணிகளை கழற்றி போட்டனர். அமைச்சர் வருவதால் காலணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு தூய்மைப் பணியாளர்களை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து தூய்மைப் பணியாளர்கள் வெறும் கைகளால் காலணிகளை அப்புறப்படுத்திய காணொலி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “சென்னை விம்கோ நகரில் தவெக அமைச்சர் திரு. ஆனந்த் அவர்கள் கலந்துகொண்ட, திருவொற்றியூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) அலுவலகத் திறப்பு நிகழ்வின்போது, தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு வெறும் கைகளால் காலணிகளை அப்புறப்படுத்திய அநாகரிகமான செயல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சமூகத்தின் தூய்மைக்காகப் பாடுபடும் எளிய மனிதர்களை இத்தகைய இழிவான முறையில் நடத்தியிருப்பது, அவர்களின் கண்ணியத்தை முற்றிலும் சிதைக்கும் மனிதநேயமற்ற செயலாகும்; இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
துப்புரவுத் தொழிலாளர்களை இழிவுபடுத்திய தவெகவிற்கு கண்டனம்!
— Nainar Nagenthran (@NainarBJP) June 25, 2026
சென்னை விம்கோ நகரில் தவெக அமைச்சர் திரு. @BussyAnand அவர்கள் கலந்துகொண்ட, திருவொற்றியூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) அலுவலகத் திறப்பு நிகழ்வின்போது, தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு வெறும் கைகளால் காலணிகளை… pic.twitter.com/4c36KegnaO
மேடைகளில் சமத்துவம், சமூகநீதி மற்றும் தொழிலாளர் நலன் குறித்துப் பேசும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சியின் பின்னணியில் நிகழ்ந்துள்ள இந்த அநீதிக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? எளிய மக்களின் உழைப்பையும் சுயமரியாதையையும் மதிக்காத இவர்களின் செயல், இவர்கள் பேசும் கொள்கைகள் அனைத்தும் வெறும் வெற்று முழக்கங்கள் தான் என்பதைக் காட்டுகிறது. எனவே, இந்த அவலச் சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மக்கள் மத்தியில் வெற்று அரசியல் பேசாமல், தங்கள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் முதலில் மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

