"பெண்களுக்கு மரியாதை இல்லை"- அரியலூரில் தவெக கொடி இறக்கம்
அரியலூர் அருகே விஜய் கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை என குற்றம் சாட்டி அரியலூரில் தவெக மகளிர் அணியினர் கூண்டோடு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்றிய கொடியினை இறக்கியதால் அரியலூர் மாவட்ட விஜய் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் கார்குடி காலணி தெருவில் வசித்து வருபவர் பிரியதர்ஷினி ஜெயபால். இவர் விஜய் நடத்தி வரும் கட்சியில் ஒன்றிய மகளிரணி நிர்வாகியாக பணியாற்றி வந்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த இவர், நடிகர் விஜயின் தீவிர ரசிகையாக இருந்து வந்துள்ளார். தற்போது விஜய் நடத்தி வரும் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு அண்மையில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டிலும் மகளிர் அணி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு சென்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கழக பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விஜய் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இவரது சொந்த ஊரான கார்குடி காலணி தெருவிலும் கொடி ஏற்றப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிகளை அவர் சொந்த செலவில் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் கட்சியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் பிரியதர்ஷினி உள்ளிட்ட மகளிர் நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு நியாயம் கேட்ட பிரியதர்ஷனி ஜெயபால் மற்றும் ஏனைய மகளிர் நிர்வாகிகளை மதிக்காமல் விஜய் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதில் அதிருப்தி அடைந்த பிரியதர்ஷினி ஜெயபால் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மகளிர் நிர்வாகிகளால் ஏற்றப்பட்ட விஜய் கட்சியின் கொடியினை இறக்கினர். பின்னர் தனது கட்சி துண்டு, காரில் கட்டிய கொடி மற்றும் பேட்ச் அட்டைகளை அற வழியில் எடுத்துச் சென்றனர். அப்போது அங்கு வந்த விஜய் கட்சி நிர்வாகி ஒருவர் மாவட்ட செயலாளர் ஏற்றிய கொடியை எப்படி நீங்கள் இறக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நாங்கள் சொந்த செலவில்தான் செய்துள்ளோம் என்றும் விஜய் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு என்று தலைவர் விஜய் கூறியதால்தான் கட்சியில் சேர்ந்தோம் ஆனால் பெண்களுக்கு மதிப்பில்லை என்பதால் கட்சியில் இருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம், எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறினர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் கட்சியில் மகளிர் நிர்வாகிகள் கூண்டோடு விலகிய சம்பவம் அரியலூர் மாவட்ட விஜய் கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.