விஜய் கரூர் செல்லாதது ஏன்?- தவெக விளக்கம்
கரூர் சென்று மக்களை சந்திக்க 2 முதல் 3 மணிநேரம் மட்டுமே அனுமதி என்ற கட்டாயம் இருந்தால் மட்டுமே இந்நிகழ்வு சென்னையில் நடத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கரூர் பரப்புரையின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் அதேபோல காயமடைந்தோருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி கட்சி சார்பில் வழங்கப்பட்ட நிலையில், அவர்களை இன்று சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் தனியார் அரங்கில் ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியே சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
சென்னையில் இந்த நிகழ்வு நடத்துவதற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், அதற்கான விளக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கரூர் சென்று உயிரிழந்த குடும்பத்தாரை பார்ப்பதில் மண்டபம் சிக்கலை தாண்டி, கரூரில் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள்ளாக நிகழ்வை நடத்தி முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாகவும். தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களிடம் அதிக நேரம் செலவிட்டு மனம் விட்டு பேச நினைத்ததால் மட்டுமே சென்னையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கரூரில் இந்த நிகழ்வை நடத்தி இருந்தால் மூன்று மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டது மேலும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் கரூர் சென்று சந்திப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் தலைவர் விஜய் கரூர் சென்று அனைத்து குடும்பத்தாரையும் சந்தித்து பேச குறைந்தபட்சம் 6 மணி நேரம் தேவைப்படும் என கணக்கிட்டோம். ஆனால் இரண்டு முதல் மூன்று மணி நேரம் மட்டுமே அனுமதி என்ற கட்டாயம் உண்டானதால், கரூர் செல்லும் திட்டம் மாற்றப்பட்டது. குறிப்பாக நேரத்தை கருத்தில் கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்களோடு பேச வேண்டும் என விஜய் கருதியதால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


