“மக்களைச் சபிக்கும் அரசியலை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்”- ஆர்.எஸ்.பாரதிக்கு தவெக கண்டனம்

 
rs

சைதாப்பேட்டை வாக்காளர்கள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய விவகாரத்துக்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் தளத்தில், “தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கு சாபமா? — திமுகவின் மூர்க்கத்தனமான காழ்ப்புணர்ச்சி! “உங்களுக்கு நல்ல சாவே வராது” என்று ஜனநாயகத்தின் எஜமானர்களான பொதுமக்களைப் பார்த்து திமுகவின் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது, அவர்களின் ஆணவத்தையும் வெறிபிடித்த அதிகாரப் பசியையும் வெளிப்படுத்துகிறது. தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்காத மக்கள் மீது இத்தகைய வஞ்சத்தையும், வன்மத்தையும் கக்கும் திமுகவின் போக்கு, அவர்களின் ஜனநாயக விரோத மனப்பான்மைக்கு மற்றுமொரு சான்றாகும்.

மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல், அந்த மக்களையே இழிவுபடுத்துவது ஜனநாயக விரோதம். தோல்வி தந்த விரக்தியில், மக்கள் ஆதரவை ஏன் இழந்தோம் என்று சுயபரிசோதனை செய்யாமல், “எப்படி எங்களைத் தோற்கடிக்கலாம்?” என்ற ஆத்திரம்தான் இத்தகைய சாபங்களாக வெடித்துச் சிதறுகின்றன. மக்களைச் சபிக்கும் அரசியலை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள். ஜனநாயகத்தில் மக்கள் தான் மன்னர்கள்! அவர்களைச் சபிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.