பொங்கல் பரிசு என்ற பெயரில் அன்பளிப்பு கொடுத்து டாஸ்மாக் மூலமாக அதை பிடுங்கிக் கொள்வது நவீனத் தந்திரம்- அருண்ராஜ்
மதுவைக் கொடுத்து மயக்குவதை நிறுத்திவிட்டு, வளர்ச்சியைப் கொடுத்து வாழவைக்கப் பழகுங்கள். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் உண்மையான வளர்ச்சியே தவிர, மது விற்பனையில் சாதனை படைப்பது அல்ல என தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தைத்திருநாளில் தமிழர்களின் இல்லங்களில் இன்பம் பொங்கியதோ இல்லையோ, அரசின் கஜானாவில் மது விற்பனைப் பணம் மட்டும் பொங்கி வழிந்திருக்கிறது. போகி மற்றும், பொங்கல் அன்றும் இரண்டே நாட்களில் 518 கோடி ரூபாயை விழுங்கியிருக்கும் இந்தச் சாதனை, தமிழ்ச் சமூகத்தின் மீது விழுந்த வேதனைச் சரித்திரம். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையே (11.19%) தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, மது விற்பனையில் (14.10%) அசுர வளர்ச்சி கண்டிருப்பதுதான் நீங்கள் சொல்லும் விடியலா? பொங்கல் பரிசு என்ற பெயரில் மக்களுக்கு ஒரு கையில் அன்பளிப்பு கொடுத்து, மறு கையில் டாஸ்மாக் மூலமாக அதை அப்படியே பிடுங்கிக் கொள்வது, ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டும் நவீனத் தந்திரம் அன்றி வேறில்லை.
நான்கு நாட்களில் 900 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்படும் இந்த விற்பனை வெறி, ஒருபுறம் இருக்கட்டும்; கடைகளை மூடுகிறோம் என்று கணக்கு காட்டிவிட்டு, மறுபுறம் 'மனமகிழ் மன்றங்கள்' வழியாக மதுவை ஆறாக ஓடவிட்டு, 82 கோடிக்கும் மேல் வசூலிப்பது அப்பட்டமான கண்துடைப்பு நாடகம். மதுக்கடைகளை மூடுவது போல் பாவனை செய்துவிட்டு, கொல்லைப்புறமாக விற்பனையைப் பெருக்குவதுதான் ஆட்சியின் அழகா? மதுக்கோப்பைகளை நிரப்புவதிலும், இலக்கு வைத்து கல்லா கட்டுவதிலும் இந்த அரசு காட்டும் அத்துணை ஆர்வத்தில், ஒரு சிறு துளி அக்கறையையாவது தரம் தாழ்ந்து கிடக்கும் பள்ளிக்கல்வியைத் தூக்கி நிறுத்துவதிலும், ஏழைகளுக்கான மருத்துவத்தைக் காப்பதிலும், சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கைச் சரிசெய்வதிலும் காட்டியிருந்தால், இன்று தமிழ்நாடு எவ்வளவோ தலைநிமிர்ந்து நின்றிருக்கும்.மதுவைக் கொடுத்து மயக்குவதை நிறுத்திவிட்டு, வளர்ச்சியைப் கொடுத்து வாழவைக்கப் பழகுங்கள். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் உண்மையான வளர்ச்சியே தவிர, மது விற்பனையில் சாதனை படைப்பது அல்ல!!!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


