"நயினார் நாகேந்திரன் தன் தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளார்"- அருண்ராஜ்
அநாகரிகமாக பேசிய நயினார் நாகேந்திரன் தன் தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளார். மக்கள் இதனைப் பார்த்துக் கொண்டு உள்ளதாக தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

தமிழக வெற்றி கழகம் மற்றும் பள்ளிபாளையம் ராதா ஆர்த்தோ சென்டர் திருச்செங்கோடு கவிதா மருத்துவமனைஆகியவை இணைந்து நடத்திய விலையில்லா மருத்துவ முகாம் திருச்செங்கோடு பெரிய பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாவை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ், “கட்சி தொடங்குவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே விஜயின் ரசிகர்கள் இதுபோல் பல மருத்துவ முகாம்களை நடத்தி மக்கள் சேவையாற்றி இருக்கிறோம். தொடர்ந்து இதுபோல் செய்து கொண்டே இருப்போம். நாயினார் நாகேந்திரன் கீழ்த்தரமாக விஜய் குறித்து விமர்சித்துள்ளார். மக்கள் இதனை பார்த்துக் கொண்டுள்ளனர். அவர் தரத்தை அவரே குறைத்துக் கொண்டுள்ளார். சேலம் சம்பவம் வரை விஜய் அரைசதம் அடித்துள்ளார். விரைவில் அவர் கூட்டங்களில் நடக்கும் சம்பவங்கள் மூலம் செஞ்சுரி அடிப்பார் என அமைச்சர் நாசர் விமர்சிக்கிறார். சேலத்தில் நடந்தது ஒரு விபத்து அதை வைத்து மோசமான அரசியல் செய்யும் அமைச்சர் நாசரின் செயலை கண்டிக்கிறோம். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது திமுக என்னும் தீய சக்திக்கு எதிராக தான். அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்திருப்பதை பார்த்து தான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஊழல் நிறைந்த கட்சியாக திமுக ஆட்சியில் இருப்பதால்தான் தமிழக வெற்றி கழகத்தை துவக்கினோம். ஜனநாயகப் மாண்புக்கு எதிராக குடும்ப அரசியல் செய்து கொண்டுள்ளனர்.இதனை தடுக்கத்தான் நாங்கள் கட்சி ஆரம்பித்துள்ளோம்.
கூட்டணியை பொருத்தவரை ஆரம்பத்தில் இருந்து எங்களுடைய நிலைப்பாடு ஒன்றே ஒன்றுதான். எங்களுடன் எங்கள் தலைமையை ஏற்று வருபவர்களுக்கு எப்பொழுதும் இடம் அளிக்க தயாராக இருக்கிறோம். யாரும் வரவில்லை என்றாலும் தனித்துப் போட்டியிடும் தகுதியுடன் தான் தமிழக வெற்றி கழகம் உள்ளது. கூட்டணி குறித்த முடிவை எங்கள் தலைவர் அறிவிப்பார். விரைவில் அறிவிப்பு வெளிவரும். நயினார் நாகேந்திரனுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்களே ஒதுக்கி விட்டார்கள். 30 சதவீதம் அல்ல ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்குடன் தமிழக வெற்றி கழகம் திகழ்கிறது” எனக் கூறினார்.

