தவெகவுக்கு எதிராக திமுகவும், அதிமுகவும் சேர முயற்சி - அருண்ராஜ்

 
தவெகவுக்கு எதிராக திமுகவும், அதிமுகவும் சேர முயற்சி - அருண்ராஜ்

தவெகவுக்கு எதிராக திமுகவும், அதிமுகவும் சேர முயற்சி நடைபெறுவதாக தவெக நிர்வாகி அருண்ராஜ் கூறியுள்ளார்.

ஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொகிதீனை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண்ராஜ், “தவெகவுக்கு எதிராக திமுகவும், அதிமுகவும் சேர முயற்சி நடைபெறுகிறது. இதை எல்லாம் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள், மக்கள் சிந்திக்க வேண்டும். ஆதரவு கோரி பல கட்சிகளிடம் கடிதம் கொடுத்துள்ளோம். மக்கள் ஆதரவுடன் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அரசியல் சதிகளை முறியடித்து தவெக தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது, ஆகவே நிச்சயம் ஆட்சியமைப்போம். தேர்தலுக்கு முன்பே தவெகவுக்கு பல்வேறு இடையூறுகள், தமிழகத்தில் நடப்பதை மக்கள் கவனித்து வருகின்றனர். மக்கள் தீர்ப்பை நீர்த்துப்போக செய்யும் அளவுக்கு திமுக, அதிமுக முயற்சி செய்கின்றன. பாஜவுக்கு எதிராக காங்., உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுக்கின்றன. தவெக அமைதியாக இருக்கிறது. நேரம் வரும்போது பேசுவோம்.

தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். யாரால் தாமதம் செய்யப்படுகிறது என்பது பற்றி விரைவில் கூறுவோம். பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். ஆளுநர் சட்டப்படி எங்களை அழைக்க வேண்டும். திமுகவும், அதிமுகவும் கூட்டணி சேர்ந்து தவெகவை ஆட்சியமைக்க விடாமல் செய்து வருகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.