மக்களை பாதிக்காத அளவிற்கு விமான நிலைய இடம் தேர்வு செய்யப்படும்- அருண்ராஜ்
மக்களைப் பாதிக்காத அளவிற்கு இடம் தேர்வு செய்யப்படும். விமான நிலையம் அமைவது குறித்து பொறுத்து இருந்து பாருங்கள் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டியளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “சட்டமன்றத்தில் எதிர்கட்சியான திமுக ஆக்கப்பூர்வமான கருத்துகளை பேசினால் நாங்களும் பேசுவோம். ஆனால் கடந்த கால திமுக ஆட்சி பற்றியும் திமுக தலைவர்களை பற்றி தான் பேசுவதற்கு நேரம் சரியாக இருக்கிறது. எந்த மாதிரியான விசயங்கள் பற்றி பேசினாலும் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். ஆக்கப்பூர்வமாக திமுக பேசினால் நாங்களும் பேசுவோம். சென்னைக்கு புதிய பசுமை விமான நிலையம் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் எந்த இடம் என்பதில் தான் பிரச்சனையாக இருக்கிறது. புதிய இடம் குறித்து பரிசிலித்து வருகிறோம். கொஞ்சம் பொறுத்து இருந்து பாருங்கள். மக்கள் பாதிக்காத வகையில் வளர்ச்சிக்கான திட்டமாக கொண்டு வரப்படும். பருவமழையால் டெங்கு பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது டெங்கு பாதிப்பால் நடப்பாண்டில் 4 பேர் உயிரிழந்தனர். பருவகால காய்ச்சல்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களிடம் அமைச்சர்கள் தொடந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் பேச்சுவார்த்தைக்குக் கூட அழைக்கவில்லை. தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் விரைவில் சுமூகமான முடிவு எடுக்கப்படும்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்தில் முறைகேடு எதுவும் இல்லை. தனியார் மருத்துவமனைக்கு பதிவு அடிப்படையில் தகுதியானவர்களுக்கே உறுப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் மூலம் உறுப்பு தானம் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பதிவு செய்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பதிவு செய்யப்பட்டவர்களின் காத்திருப்பு பட்டியலின் அடிப்படையிலேயே உறுப்புகள் ஒதுக்கப்படுகின்றன. இதற்காக குழுவும் நிலையான வழிகாட்டல்களும் உள்ளன” என்றார்.

