“கிட்னி திருட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்”- அருண்ராஜ்

 
arunraj

கிட்னி திருட்டு விசாரணை வெளிப்படை தன்மையோடு நடக்கும் என  மக்களுக்கு உத்தரவாதத்தை தருகிறேன். கிட்னி திருட்டில் முன்னாள் அமைச்சர் உட்பட யார் தவறு செய்திருந்தாலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உறுதி அளித்துள்ளார்.

அருண்ராஜ்

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைமையக மற்றும் பிற மருத்துவமனைகளின் செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மருத்துவ பணிகள் இயக்குநர்கள், இணை இயக்குநர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் வலுவான கட்டமைப்பு உள்ளது. மருத்துவமனை வளாகங்கள் பராமரிப்பில் தான் குறைபாடுகள் உள்ளது. கழிவறையில் தொடங்கி மருத்துவ வளாகம் வரை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதன் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். துறைசார் அதிகாரிகள் மருத்துவமனைகளின் தூய்மையை உறுதிப்படுத்துதல் அவசியம். நோயாளிகளை அணுகுவது , சிகிச்சை அளிப்பது என அனைத்திலும் 100 சதவீதம் நேர்மையாகவும் கண்ணியத்துடனும் நடந்து கொள்வது அவசியம். முதலமைச்சர் CLEAN MODEL அரசாக செயல்பட வேண்டும். மக்களுக்கான தரமான சிகிச்சைகள் வழங்குவதில் அரசு மருத்துவமனைகளின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. மருத்துவத்துறை அதிகாரிகளும் , ஊழியர்களும் கவனத்தோடு பணியாற்ற வேண்டும்” என்றார்.


இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், “முதலமைச்சர் சுகாதாரத்துறைக்காக என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளார்கள் என்பது குறித்தும், மக்கள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்தும் ஆலோசனை செய்தோம். 70 சதவீத மருத்துவமனைகள் இணை இயக்குநர்கள் கண்காணிப்பில் தான் செயல்படுகின்றன. அரசு மருத்துவமனைக்கு சென்றால் கழிவறை சுத்தமாக இருக்கும், மருத்துவமனை நன்றாக இருக்கும் என்ற சூழ்நிலை உருவாக வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளேன். 8000 தனியார் மருத்துவமனைகள் அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்குவதை இணைய வழியில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் கிட்னி திருட்டு விசாரணை சட்டமன்ற தேர்தலால் தொய்வில் இருந்தது. மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நான் ஒரு உத்தரவாதத்தை தருகிறேன், கிட்னி திருட்டு விசாரணை வெளிப்படை தன்மையோடு நடக்கும். கிட்னி திருட்டில் முன்னாள் அமைச்சர் உட்பட யார் தவறு செய்திருந்தாலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.தென்காசி மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆய்வு செய்ததாக தகவல் வந்தது, மக்கள் பிரதிநிதி இல்லாத கட்சி நிர்வாகிகள் யாரும் எந்த இடத்திலும் ஆய்வு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.