அனுமதி கிடைத்தவுடன் விஜய் நிச்சயம் கரூருக்கு வருவார்- அருண்ராஜ்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருடன் விஜய் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார், விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளோம் என தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். இந்த வீடியோ கால் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரியுமான அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்துள்ளனர்.
இது தொடர்பாக கரூரில் பேட்டியளித்த அருண்ராஜ், “கரூரில் கடத்த 27-ம் தேதி நடந்த சம்பவம் வேதனை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விரைவில் தலைவர் விஜய் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக கரூரில் மக்களை சந்திக்க அனுமதி கேட்டு டிஜிபியிடம் இமெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.. கரூரை சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் எங்கள் கட்சித் தலைவர் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீங்கள் தைரியமாக இருங்கள்! தொடர்ந்து போராடுங்கள்! என்று ஆறுதல் கூறினர். என்னதான் ஆறுதல் கூறினாலும் இது ஈடுகட்ட முடியாத இழப்பு. இனி இது போன்ற சம்பவம் நடத்தக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் துணை இருப்பேன் என விஜய் கூறியுள்ளார். இன்று டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம். அரசு நடவடிக்கைகளுக்கு இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றார்.


