“ஒத்த ரூபாய் கூட கொடுக்காம 15 லட்சம் பேர் கூடுன ஒரே மாநாடு த.வெ.க மாநாடுதான்”- புஸ்ஸி ஆனந்த்
தமிழக மக்களுக்கு நன்றி உள்ளவராக விஜய் இருப்பார் என்பதால் தான், சினிமாவின் உச்சத்தை விட்டு மக்கள் பணி செய்ய அவர் வந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறினார்.
விக்கிரவாண்டி அருகேயுள்ள கயத்தூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் பங்கேற்று சமத்துவ பொங்கலை கொண்டாடினார். அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக சார்பில் பொங்கல் தொகுப்பு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவானது அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..
நலத்திட்ட விழா வழங்கும் மேடையில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், “விழுப்புரம், விக்கிரவாண்டி, வி.சாலை என்றாலே வெற்றி தான். ஈரோடு, மதுரை, திருச்சி என எல்லா இடத்திற்கும் மாநாடு நடத்த அனுமதி கேட்டோம். காலையில் ஒகே என சொல்வார்கள், மாலையில் இல்லை என அனுமதி மறுக்கப்பட்டது. விக்கிர்வாண்டியில் மாநாடு நடத்த இடம் கேட்டவுடன் விவசாயிகள் போட்டி போட்டு கொண்டு இடம் கொடுத்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறென். தமிழக மக்களுக்கு நன்றி உள்ளவராக விஜய் இருப்பார். அதனால் தான் சினிமாவின் உச்சத்தை விட்டு மக்கள் பணி செய்ய வந்திருக்கிறார். மக்களுக்கு பிரச்சனை என்றால் விஜய்யும் வெற்றிக்கழகமும் இருக்கும், ஒத்த ரூபாய் கூட கொடுக்காம 15 லட்சம் பேர் கூடுன ஒரே மாநாடு தமிழக வெற்றி கழக மாநாடுதான், காவல் துறை மாநாட்டிற்கு உறுதுணையாக இருந்தது, அவர்களுக்கும் நன்றி” என்றார்.