அற்ப அரசியல் ஆதாயத்திற்காக பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின்- ஆதவ் அர்ஜூனா
தமிழ்நாட்டின் பெருமதிப்பிற்குரிய பெண்களை, தகாத வார்த்தைகளில் இழிவுபடுத்திவிட்டு, அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என தலைக்கனத்தில் திரியும் வக்கிரம்பிடித்த பொன்ராஜின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டின் பெருமதிப்பிற்குரிய பெண்களை, தகாத வார்த்தைகளில் இழிவுபடுத்திவிட்டு, அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என தலைக்கனத்தில் திரியும் வக்கிரம்பிடித்த பொன்ராஜின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அற்ப அரசியல் ஆதாயத்திற்காக ஒரு ஏவல் ஆளைக் கீழ்த்தரமாகப் பேசவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார் திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள். தேர்தல் கணக்கைக் கருத்தில் கொண்டு, தமிழக பெண்களுக்கு எதிராக அருவருக்கத்தக்க இழிச் செயல்களிலும் இறங்கிவிட்ட இத்தகைய கொடூர மனம் படைத்தவர்களை இதுவரை தமிழக மக்கள் பார்த்ததில்லை.
பெண் உரிமை வேஷம் போட்டுவரும் திமுக தலைமை இதுவரை கள்ள மௌனம் காப்பது ஏன்? அக்கட்சியின் மகளிரணி தலைவி உட்பட யாருக்கும் இந்த வன்முறை கருத்து உறுத்தவில்லையா?அதிகார அடிவருடியும், வக்கிர நபருமான பொன்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பெண்களின் சுயமரியாதைக்கு என்றும் களத்தில் நிற்கும் நம் கழகத் தலைவர் அவர்கள் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.தேர்தல் ஆணையமும் காவல்துறையும் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பொன்ராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழக பெண்கள் தங்கள் தன்மானம் காக்கும் உரிமைக்காக, உறுதியான போராட்டத்தின் மூலம் தரமிழந்த அநாகரிக கூட்டத்தைத் தண்டிப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

