காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க முதல்வர் விஜய் உத்தரவு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது, பொதுமக்களுக்கு தகவல் கொடுக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என கூறியுள்ளோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
வில்லிவாக்கத்தில் அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது, பொதுமக்களுக்கு தகவல் கொடுக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என கூறியுள்ளோம். காவல்நிலையத்தில் புகாரளிக்க வருவோரும், புகாரைப் பெறும் அதிகாரிகளும் வீடியோ பதிவு செய்ய கேட்டுக்கொண்டுள்ளோம். வில்லிவாக்கத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, அரசுப் பள்ளி திறக்க 10 நாளில் நிலம் கண்டறிய கேட்டுள்ளோம்.
அரசு அலுவலகங்களில் தவெக நிர்வாகிகளின் தலையீடு இருக்ககூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்றாலும், வாங்கினாலும் குண்டர் சட்டம் பாயும். சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளோம். காவல்துறையினரின் சுதந்திரத்தில் எந்த குறுக்கீடும் இருக்காது. காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரப்படும்” என்றார்.

