“விஜய் ஆஸ்திரேலியா செல்லவில்லை, நிலவுக்கு செல்கிறார்”- ஆதவ் அர்ஜூனா

 
ஆதவ் அர்ஜூனா

சென்னை லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறையை தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரும்  வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளருமான ஆதவ்  அர்ஜுனா நேரில் பார்வையிட்டார்.

“நான்கு நாட்களில் தமிழ்நாட்டின் நிலவரம் மாறிவிட்டது”- ஆதவ் அர்ஜூனா

பின் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, “தமிழக வெற்றி கழகத் தலைவர் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஸ்ட்ராங் ரூமை வேட்பாளர்கள்  நேரில் பார்வையிட கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும், ஒவ்வொரு சுற்றின் போதும் நேர்மையான அடிப்படையில் வாக்கு எண்ண வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்,  அதை தேர்தல் ஆணையத்திலும் கேட்டுள்ளோம். வில்லிவாக்கம் தொகுதியில் 28 வேட்பாளர்கள் உள்ளோம். ஆனால் வாக்கு பெட்டிகள் வைத்துள்ள லயோலா கல்லூரி வகுப்பறை சிறியதாக உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 5 பேருக்கு மேல் நிற்க முடியாத அளவிற்கு சிறிய அறைகளாக வகுப்பறைகள் உள்ளது. காலஅவகாசம் கொடுத்து சரியாக வாக்கு எண்ணி  தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.  லயோலா கல்லூரியில் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. வாக்கு எண்ணும் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வேலைகளில் தலைவர் விஜய் தினமும் ஈடுபட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிரந்தரமாக ஓய்வெடுக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். விஜய் ஆஸ்திரேலியா செல்லவில்லை, நாளை நிலவுக்குச் செல்லப் போகிறார். திமுக தான் அதற்கு ராக்கெட் தயார் செய்கிறார்கள். பொய் கதைகளுக்கு பதில் சொல்ல வேண்டாம். மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை பற்றி தலைவர்  சிந்தித்து வருகிறார். 50 வருடங்கள் கழித்து மக்கள் மாற்றத்திற்கான முடிவை கொடுப்பார்கள். வாக்கு எண்ணும் நாளன்று வாக்கு எண்ணும் அலுவலர்கள், வழக்கறிஞர் பிரிவு ஆகியோரை தலைவர் தயார் நிலையில் வைக்க கூறியுள்ளார். 

வாக்கு எண்ணிக்கை பணியை தலைவர் உட்பட அனைவரும் மேற்கொண்டு வருகிறோம்.தேர்தலுக்கு கடைசி 4 நாட்கள் தமிழ்நாட்டின் நிலவரம் மாறி உள்ளது.  வாக்கு எண்ணும் மையங்களில்  ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் வேட்பாளர்கள் சுழற்சி முறையில் பார்வையிட்டு செல்ல 234 தொகுதிகளிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக எப்போது தோற்கிறார்களோ அந்த கடைசி நிமிடத்தில் ரவுடிசத்தை கையில் எடுப்பார்கள். அதை தான் துறைமுகம் தொகுதியில் பார்த்தோம். மாலை 5 மணி அளவில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு 40 பேரை அழைத்து வந்து ரவுடிசம் செய்தார். சைதாப்பேட்டையில் எங்களது வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் திமுக கடைசி நேரத்தில் வாக்குக்கு 5000 ரூபாய் கொடுத்ததை நம்பி இருந்தார்கள். மக்கள் 5000 ரூபாயை தூக்கி போட்டுவிட்டு ஜனநாயக வெற்றியாக இந்த தேர்தலை தமிழக வெற்றி கழகத்திற்கு கொடுக்க உள்ளார்கள். 
தமிழக வெற்றி கழகம் சார்பில் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதற்கான எந்த செயலிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தார்.