“அதிமுக கூட்டணியில் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் சேரவில்லை; அமித்ஷா சொன்னதால் சேர்ந்தோம்”- தினகரன்
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “கருத்துவேறுபாடுகளில் பிரிந்திருந்தோம், 2021ல் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது. வயது முதிர்ந்த மூதாட்டிகள் கூட பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். போலீசாரே கஞ்சா விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம், பெண்கள் வாக்கு திமுகவிற்கு கிடைக்கும் என்று முதல்வரும், துணை முதல்வரும் பேசி வருகிறார்கள். ஆனால் பாலியல் பிரச்னையால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றிலும் ஊழல் அதிகரித்துள்ளது. ரவுடிகள்,கூலிப்படைகள் ஜெயலலிதா ஆட்சியில் அடக்கிவைக்கப்பட்டனர். அம்மாவின் ஆட்சி தான் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். பா.ஜ.க ஆளும் ஆட்சியில் சிறுபான்மையினர் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை
அம்மாவின் ஆட்சி வரவேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க உடன் கைகோர்த்துள்ளோம், நான் தேர்தலில் போட்டியிடவில்லை. சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் சேரவில்லை. அமித்ஷா 3 மாதத்திற்கு முன்பு அழைத்து பேசினார். எல்லோரும் ஒன்று சேரவேண்டும் என்றார், அதனை தொடர்ந்து இணைந்துள்ளோம். பதவி வெறியால் அ.தி.மு.க வில் முதலமைச்சராக இருந்தவரெல்லாம் தி.மு.க வில் இணைந்துள்ளார். இது துரோகம், நரி வேடம் போட்டு சேர்ந்துள்ளனர். நாங்கள் பெட்டிக்காகவோ பதவிக்காகவோ இணையவில்லை அம்மாவில் ஆட்சி வர வேண்டும்” என்றார்.

