“துரோகி என்றால் அது இபிஎஸ்தான்”- டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

வீணாய் போன பழனிசாமி பற்றி பேசி, கவனத்தை திசை திருப்ப வேண்டாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் அமுமுகவின் புதிய தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “புதிய கல்விக் கொள்கை மூலம் மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து இரு மொழி கொள்கை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு மொழிக் கொள்கை போதும் என்றால், ஒன்றிய அரசிடம் பேசி விலக்கு கேளுங்கள். ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதாக தமிழக அரசு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய் உள்ளது. கூலிப்படைகள் அதிகமாகி உள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சினையை திசை திருப்புவதற்கா, இந்தி திணிப்பு என வருகிறார்கள். உங்கள் அப்பாவுக்கு சிலை திறக்க ஒன்றிய அமைச்சரை அணுகும் நீங்கள் இந்த பிரச்சினைக்கு பிரதமரை அணுகுங்கள். வீணாய் போன பழனிச்சாமி பற்றி கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். துரோகி என்றால் அது இபிஎஸ்தான். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருந்து வருகிறோம். அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் திரண்டு உறுதியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் திமுகவை வீழ்த்தும். தாத்தா என்று கூப்பிட வேண்டியவரை அப்பா என்று சொல்கிறார்கள். Getout modi என்று சொல்கிறார்கள், 2026ல் getout DMK என்று சொல்லப் போகிறோம். திமுகவை வீழ்த்துவது தான் 2026ல் அமமுக வியூகம். விஜய்க்கு Y பாதுகாப்பு தேவை என மத்திய அரசு நினைத்து வழங்கியுள்ளது, அதில் எந்த அரசியலும் இல்லை” என்றார்.