அரசுக்கு உதவுவதுதான் ஆளுநரின் வேலை- டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

என்எல்சி விவகாரத்தில் கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி போராட்டம் அறிவிக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Image
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகிகளோடு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “நெய்வேலியில் நிலம் கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நடத்திய போராட்டத்திற்கான அழைப்பு தனக்கு வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிர்வாகிகளை அனுப்பி வைத்திருப்பேன். திமுக என்றாலே இரட்டை நிலைப்பாடு தான். கூட்டணி கட்சித் தலைவர்களிடம் சுமுக உடன்பாடு எட்டப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ள நிலையில் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். என்எல்சி நிர்வாகம் ஏற்கனவே விவசாயிகள் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேற்றாமல் இருக்கிறது. உடனடியாக விரிவாக்க பணியை நிறுத்த வேண்டும்.

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் இயற்றிய சட்டத்திற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு என்ன சட்டம் இயற்றுகிறதோ, அதற்கு தன்னால் முடிந்த அளவு உதவுவதுதான் ஆளுநரின் வேலை. எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை நடத்தி தன்னைத்தானே அதிமுக பொதுச்செயலாளர் என அறிவித்து கொள்ளலாம். ஆனால் அதனை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும், ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்புவது ஆளுநருக்கு மக்கள் நலனின் மீது அக்கறை இல்லை என்பதை காண்பிக்கிறது. 

Image

மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர், தமிழ்நாடு மக்களின் நலனுக்காக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை அங்கீகரிக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதுதான் எங்களின் விருப்பமாக உள்ளது. ஆன்லைன் ரம்மி தடை மசோதா மக்களின் நலனுக்கான சட்டமாக நிறைவேற்றவேண்டும். ஆனால் ஆளுநர், தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என தட்டிக்கழிப்பது ஆளுநருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லாததை காட்டுகிறது. இவரின் இந்த செயல்பாடுகள் மத்திய அரசுக்குதான் கெட்ட பெயரை உருவாக்கிவருகிறது.” எனக் கூறினார்.