பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

 
ttv

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 
 
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணிநிரந்தரம் செய்வதோடு, பொங்கல் திருநாளை தங்கள் குடும்பத்தினரோடு கொண்டாட ஏதுவாக போனஸ் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் 5 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ், மருத்துவக்காப்பீடு உள்ளிட்ட எந்தவிதமான சலுகைகளையும் வழங்காமல் அவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

ttv dhinakaran

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிப்பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது பகுதிநேர ஆசிரியர்களுக்கு இழைக்கும் நம்பிக்கைத் துரோகம் ஆகும். எனவே, மிகக்குறைவான ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தம் செய்வதோடு, வரவிருக்கின்ற பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக போனஸ் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.