காலிப்பணியிடங்களை நிரப்ப திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன ? - டிடிவி தினகரன் கேள்வி

 
ttv dhinakaran

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்ற நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று எட்டு மாதம் கடந்தும் சுமார் நான்காயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. போட்டித் தேர்வில் மட்டுமல்லாது நியமனத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற பழனிசாமி அரசில் கொண்டுவரப்பட்ட நடைமுறையையே பின்பற்றி தேர்வை நடத்தியதோடு, அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வோ, அதன் மூலம் பணி நியமன ஆணையோ வழங்கப்படாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள சுமார் நான்காயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் குடும்பத்துடன் போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து துறைகளிலும் நிலவும் லட்சக் கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசும் அதன் அமைச்சர்களும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பது அரசுப்பணியை எதிர்பாத்து காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நான்காயிரம் ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்குவதோடு, அரசுத்துறைகளில் நிலவும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.