டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகால தொற்றுநோய்களும் தீவிரமடைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. காய்ச்சல், சளி, தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்ற டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 8 பேர் உயிரிழப்பு - டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 8, 2024
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள்…
அடுத்த சில மாதங்களுக்கு டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படும் நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் குறித்தும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, இனியாவது விளம்பர அரசியலை தவிர்த்து, மக்களை பெருமளவு பாதிக்கும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுப்பதோடு, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.