வாடகை கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியை திரும்ப பெற வேண்டும் - டிடிவி தினகரன்

 
ttv ttv

வாடகை கட்டடங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களின் கட்டடங்களுக்கான வாடகை மீது விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசால் ஏற்கனவே பலமுறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வாலும், அதிகரிக்கப்பட்ட சொத்து வரியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வணிக நிறுவனங்களின் கட்டடங்களின் வாடகை மீது 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது போல் அமைந்திருக்கிறது.

எனவே, வணிக நிறுவனங்களின் கட்டடங்களின் வாடகை மீது விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்து, நலிவடைந்து வரும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.