டிடிவி.தினகரன், ஓபிஎஸ் சொத்து மதிப்பு வெளியானது... கேட்டா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!

 
1

ராமநாதபுரம் தொகுதியில் பாஜ கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தனது சொத்து மதிப்பு உள்ளிட்ட பிரமாண பத்திரம் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று சொத்து மதிப்பு உள்ளிட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் தனது பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ.1,11,33,138, அசையா சொத்துக்கள் ரூ.7,80,99,707, மறைந்த தனது மனைவி பெயரில் அசையும் சொத்து ரூ.10,17,694 மற்றும் அசையா சொத்துக்கள் ரூ.76,99,838 என மொத்தம் ரூ.9,79,60,377 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். தனது பெயரில் ரூ.1,52,85,226 கடன் உள்ளது எனவும், தன் மீது காவல்துறையில் 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும், எந்த வழக்கிலும் தண்டனை வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தேனி தொகுதி பாஜ கூட்டணி வேட்பாளரான அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு அசையும் சொத்துக்களாக ₹19 லட்சத்து 82 ஆயிரத்து 973, அசையா சொத்துக்களாக ₹57லட்சத்து 44 ஆயிரத்து 008, மொத்தமாக டிடிவி பெயரில் ₹77 லட்சத்து 26 ஆயிரத்து 981 மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன. டிடிவி தினகரன் மனைவி அனுராதா பெயரில் அசையும் சொத்துக்களாக ₹1 கோடியே 69லட்சத்து 25ஆயிரத்து 118, அசையா சொத்துக்களாக ₹2 கோடியே 48 லட்சத்து 79 ஆயிரத்து 707. இருவருக்கும் சேர்த்து மொத்தமாக ₹4 கோடியே 95 லட்சத்து 31ஆயிரத்து 806 மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன. மேலும், டிடிவி தினகரனுக்கு ₹9லட்சத்து 25 ஆயிரத்து 029 வங்கி மற்றும் தனிநபர் கடனாகவும், ஒன்றிய அரசு விதித்துள்ள பெரா நீதிமன்ற அபராத நிலுவையாக ₹28 கோடியும் உள்ளது. மனைவி அனுராதா பெயரில் ரூ.22 லட்சத்து 87 ஆயிரத்து 960 கடன் உள்ளது. மேலும், டிடிவி மீது 9 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 6 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.