தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வைத்திருக்கும் கொட்டு வரவேற்புக்குரியது - டிடிவி தினகரன்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கை திசைதிருப்ப முயன்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வைத்திருக்கும் கொட்டு வரவேற்புக்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல் படியே மாநிலத்தின் ஆளுநர் நடக்க வேண்டும் என்பதோடு, குடியரசுத்தலைவருக்கு இருப்பதை போன்று மசோதாக்களை கிடப்பில் வைப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்பதையும் நேற்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில், டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை திசைதிருப்பும் வகையிலும், வழக்கில் சிக்கியுள்ளவர்களை பாதுகாக்கும் நோக்கிலும், வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வைத்திருக்கும் கொட்டு மிக மிக அவசியமானது.
நேற்று ஒரே நாளில் இருவேறு வழக்குகளில் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள், நீதித்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருப்பதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கியும் ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவோர் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை பின்பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணவேந்தர் பதவியிடங்களை உடனடியாக நிரப்பும் அதே நேரத்தில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களை தப்பிக்க முயலாமல் விசாரணையை நேர்மையாகவும், நியாயமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.