திமுக அரசின் நிர்வாக தோல்வியே பொதுமக்களின் பாதிப்புக்கு முக்கிய காரணம் - டிடிவி தினகரன்

 
ttv dhinakaran ttv dhinakaran

தென்மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு மழை பாதிப்பிலிருந்து பாடம் கற்காத திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே பொதுமக்களின் பாதிப்புக்கு முக்கிய காரணம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு தென்மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் தொடர்மழையால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெய்த தொடர் மழையால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள், தற்போது பெய்து வரும் கனமழை அப்பகுதி மக்களை மீளவே முடியாத அளவிற்கான துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.  வானிலை ஆய்வு மையம் மூலமாக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட பின்பும் கூட எந்தவித முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்காத திமுக அரசால்,  ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளநீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 


ஒவ்வொரு பருவமழையின் போதும் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை மழைநீர் சூழ்வதும், உடமைகளை முழுமையாக இழந்து உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கூட கிடைக்காமல் மக்கள் போராடுவதும் வாடிக்கையாகி வருவது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது. எனவே, மேலும் இரு தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை முறையாக பின்பற்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதோடு, பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தருமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.