பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என மாண்புமிகு மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு.சி.ஆர்.பாட்டில் அவர்களை கர்நாடக மாநிலத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற மறுத்து தமிழகத்திற்கான நீரை உரிய நேரத்தில் வழங்க மறுத்துவரும் கர்நாடக அரசு, தற்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதப் போக்குடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.  கர்நாடக அரசின் இத்தகைய நடவடிக்கை, காவிரியின் குறுக்கே தமிழகத்தின் அனுமதியின்றி எந்த இடத்திலும் அணை கட்ட முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு முரணாக இருப்பதோடு, காவிரி நீரை மட்டுமே நம்பியிருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.

மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படாத நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்திற்கு கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.டி.கே.சிவக்குமார் அவர்களை அழைத்து உபசரிப்பு வழங்கிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தின் முயற்சிகளை தடுத்து நிறுத்த எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது மாநில உரிமையை விட திமுக அரசுக்கு கூட்டணி தான் முக்கியம் என்பதையே வெளிப்படுத்துகிறது.  எனவே, காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகளுக்கு நிரந்தர தடைவிதிப்பதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாக மட்டுமல்லாது, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மூலம் அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.