காவல்துறையும், திமுக அரசும் வெட்கி தலைகுணிய வேண்டும் - டிடிவி தினகரன்!

 
ttv

தலைநகர் சென்னையில் திட்டமிட்டு நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கத் தவறிய காவல்துறையும், திமுக அரசும் வெட்கித் தலைகுணிய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இன்று ஒரே நாளில் ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் செயின்பறிப்பு சம்பவங்கள் - தலைநகர் சென்னையில் திட்டமிட்டு நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கத் தவறிய காவல்துறையும், திமுக அரசும் வெட்கித் தலைகுணிய வேண்டும். சென்னையில் இன்று ஒரே நாளில் வேளச்சேரி, திருவான்மியூர், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. 

ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் அருகே 8 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற செயின்பறிப்பு சம்பவங்களை காவல்துறை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மீண்டும் அதே செயின்பறிப்பு சம்பங்கள் தொடர்ந்து அரங்கேற முக்கிய காரணமாக அமைந்துள்ளன.  தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் நடைபெறும் இதுபோன்ற செயின்பறிப்பு சம்பவங்கள் ஒட்டுமொத்த காவல்துறையின் செயலற்ற நிர்வாகத்திறனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு பெண்கள் வீட்டை விட்டே வெளியே வர முடியாத அளவிற்கு அசாதாரண சூழலையும் உருவாக்கியுள்ளது. 

எனவே, செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.