திமுக கொடி கட்டிய காரில் வந்து இளம்பெண்ணிடம் ரகளை செய்த கும்பல் - டிடிவி தினகரன் கண்டனம்
Jan 29, 2025, 14:58 IST1738142882868

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் சர்வாதிகாரியாக மாறுவது எப்போது ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம், அப்பகுதியாக திமுக கொடி பொருத்திய காரில் வந்த மதுபோதை கும்பல் தகராறில் ஈடுபட்டிருப்பதோடு, துரத்திச் சென்று மிரட்டியது போலவும் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் தொடங்கி, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் வரை திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் தொடர்பில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை என்று சொல்லும் அளவிற்கு நாளுக்கு நாள் திமுகவினர் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாக புகார் எழுந்துள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையிலும், திமுகவினரும், அக்கட்சியின் அனுதாபிகளும் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது, அச்சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு, இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.